முதல்வர் அலுவலக புதுப்பிப்பு டெண்டரில் குளறுபடி- நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்கான டெண்டர் பணிகள் முடியாத நிலையில், புதுப்பித்தல் பணிகள் எவ்வாறு தொடங்கப்பட்டன என எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவ
ஆதவ்


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்கான டெண்டர் பணிகள் முடியாத நிலையில், புதுப்பித்தல் பணிகள் எவ்வாறு தொடங்கப்பட்டன என எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

முதல்வர் அலுவலகம் மாற்றத்திற்கான டெண்டரில் உள்ள குளறுபடிகள் குறித்து சட்டமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்கு, “இன்னும் டெண்டரே முடியவில்லை, எல்லாம் அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான், எங்கள் முதல்வர் எளிமையானவர்” என்றெல்லாம் வசனம் பேசிய நீங்கள், ஒரு “Flow”-இல் பல உண்மைகளையும் உளறிவிட்டீர்கள்.

அதாவது, டெண்டரே இன்னும் முடியவில்லை என்றால், எதன் அடிப்படையில் முதல்வர் அறைக்கான புதுப்பித்தல் பணிகள் துவங்கப்பட்டன? இன்னாருக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்று ஏற்கனவே “Setting” செய்துவிட்டீர்களா? இதற்கு முன்பு இப்படி டெண்டர் விடாமல் இப்படி பணிகள் நடந்துள்ளனவா? மேலும், செய்தித்தாள் விளம்பரத்தில் 5.54 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுவிட்டு, ஆன்லைன் டெண்டரில் தொகையைக் குறிப்பிடாமல் 'NA' என்று பதிவிட்டது ஏன்? மற்ற ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத் தடுக்கவே இந்தச் சதியா?

பின்பு உங்கள் பித்தலாட்டங்களுக்கு புரட்சித் தலைவி அம்மாவின் பெயரை இழுக்கிறீர்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒட்டுமொத்த தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தான் நினைத்தாரே தவிர, தனது அலுவலகத்தை மட்டும் நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், உங்கள் முதல்வர் தனது துறைக்கான அலுவலகத்தை மட்டும் புதுப்பித்துக் கொள்ள நினைப்பது ஏன்?

“அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான் இந்த மாற்றம்” என்று நீங்கள் கூறுவது, ““பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போலானது”. காரணம், அனைத்து அரசு அமைச்சர்களுக்கும் செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, முதல்வருக்கு மட்டும் சொகுசு அறையை உருவாக்குவது “ஆடம்பரம்” இன்றி வேறென்ன? எனவே, முதல்வரின் அறையை ஆடம்பரமாக்குவதன் உண்மைக் காரணத்தையும், அதன் டெண்டர்களில் நடக்கும் ஊழல்களையும் ஆதாரங்களுடன் மக்கள் முன் சமர்ப்பியுங்கள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P