வேலிகொண்டா திட்ட இடம்பெயர்ந்தோருக்கு மேலும் ரூ.200 கோடி இழப்பீடு - முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
அமராவதி , 19 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தின் முக்கிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றான வேலிகொண்டா திட்டத்துக்காக நிலம், வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து இழப்பீடு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ரூ.200 க
A


அமராவதி , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தின் முக்கிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றான வேலிகொண்டா திட்டத்துக்காக நிலம், வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து இழப்பீடு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ரூ.200 கோடி இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இடம்பெயர்ந்த குடும்பங்களின் பிரதிநிதிகளிடம் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கினார்.

வேலிகொண்டா திட்டத்துக்காக தங்களது சொந்த வீடுகளை இழந்து, புதிய இடங்களில் வீடுகளை கட்டிக்கொண்ட குடும்பங்களுக்கு ஒருமுறை தீர்வு (ஓ.டி.எஸ்.) அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2,557 குடும்பங்களுக்கு ரூ.318 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 1,600 குடும்பங்களுக்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 4,157 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.518 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இழப்பீடும் விரைவில் வழங்கப்படும்

நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, வேலிகொண்டா திட்டத்துக்காக நிலம் மற்றும் வீடுகளை இழந்த மக்களின் தியாகங்களை அரசு ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்தார்.

மேலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும், மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையையும் முடிந்தவரை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

“தியாகம் செய்தது நீங்கள். உங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசு தொடர்ந்து துணையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

7 மறுகுடியமர்வு காலனிகள்

இடம்பெயர்ந்த குடும்பங்களின் மறுகுடியமர்வுக்காக மொத்தம் 7 மறுகுடியமர்வு காலனிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் வெமுலகோட்டா காலனியைத் தவிர மற்ற 6 காலனிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த காலனிகளில் மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீடுகளுக்கு படிப்படியாக குடிபெயர்ந்து வருகின்றனர்.

வேலிகொண்டா திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், திட்டத்துக்காக தியாகம் செய்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் மறுகுடியமர்வு பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA