Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஆகஸ்ட் (ஹி.ச)
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகமான இந்திரா பவனில், காங்கிரஸ் காரியக் கமிட்டி எனப்படும் செயற்குழுவின் முக்கியக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா,கே.சி. வேணுகோபால், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
கட்சியின் புதிய தலைமையகம் 9A, கோட்லா சாலையில் அமைந்துள்ள இந்திரா பவனுக்கு மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முக்கியமான கூட்டமாக இது கருதப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் நாட்டின் நடப்பு அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R.), வரவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக , நாடு தழுவிய மாணவர் குறைகள் குறித்து பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ அரசை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுத்தல் மற்றும் ராகுல் காந்தியின் ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ (Chhatron ki Goonj) மாணவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை விரிவுபடுத்துதல்,
ராமர் கோவில் நன்கொடைகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கான திட்டத்தை உருவாக்குதல்,
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சிப் பணிகளை ஆய்வு செய்தல்,
மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை அரசு கொண்டு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான உத்தியை வகுத்தல்,உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கட்சி நிகழ்வுகளில் தேசியப் பாடல் பாடப்பட்டது தொடர்பாக பா.ஜ.க எழுப்பிய விமர்சனங்களுக்குப் பிறகு, கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவது பற்றி விவாதித்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோகிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், பாஜக அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b