Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஆகஸ்ட் (ஹி.ச)
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பூசாரி பரமசிவம் (55) என்பவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜூலை 18 அன்று தகராறு ஏற்பட்டது.
தகராறு தொடர்பான விசாரணையின் போது பரமசிவத்தை சிந்தாமணி காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 11 முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார். தனது உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் காவல்துறையினர் தாக்கியதுதான் என அவர் இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்த குடும்பத்தினர் இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறும், பரமசிவத்தை தாக்கிய சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த், காவலர் அப்துல் முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தியும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதனடிப்படையில், மாவட்ட நீதிபதி மேற்பார்வையில் உடல் கூராய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, நேற்று மதுரை மாவட்ட 5வது நடுவர்மன்ற நீதிபதி லட்சுமிபிரியா, அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் பரமசிவத்தின் உடலை ஆய்வு செய்து, குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார்.
ஆனால் காவல்துறை, பரமசிவத்தின் மரணத்திற்கும் போலீஸ் விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
காவல்துறையின் இந்த மறுப்பு அறிக்கை உண்மைக்கு மாறானது எனவும், உண்மையை மறைக்கும் முயற்சி எனவும் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பரமசிவத்தின் உடலை வாங்க மறுத்துள்ள அவரது குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயர் அதிகாரிகள் தலையிட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
உரிய நீதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், எந்த அழுத்தத்திற்கும் அடிபணிந்து உடலை வாங்கப் போவதில்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால் மதுரையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / vidya.b