Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரபிரதேசம் , 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
பணமோசடி வழக்கு தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை (ED) இன்று சோதனை நடத்தியது.
மவுலானா முகமது அலி ஜவ்ஹர் அறக்கட்டளை மற்றும் முகமது அலி ஜவ்ஹர் பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றது.
இன்று அதிகாலை தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கை தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மற்றும் சஹாரன்பூர் மாவட்டங்களிலும், தலைநகர் டெல்லியிலும் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையினருடன் இணைந்து அமலாக்கத் துறையின் பல குழுக்கள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றன. ஆசம் கானுடன் தொடர்புடைய மவுலானா முகமது அலி ஜவ்ஹர் அறக்கட்டளை மற்றும் முகமது அலி ஜவ்ஹர் பல்கலைக்கழக வளாகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ராம்பூரில் உள்ள முகமது அலி ஜவ்ஹர் பல்கலைக்கழகம் என்பது ஆசம் கானால் 2006-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தனியார் கல்வி நிறுவனமாகும். பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002-ன் பிரிவு 17-ன் கீழ், அமலாக்கத் துறையின் லக்னோ மண்டல அலுவலகம் இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணை அரசு ஒப்பந்த நிதிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் திசை திருப்பப்பட்டு, பின்னர் பல்கலைக்கழகம் மற்றும் அறக்கட்டளையில் சொத்துக்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது தொடர்பானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சில ஒப்பந்ததாரர்களுக்கும் அறக்கட்டளைக்கும் இடையே நிதி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் மூலம் பலன் பெற்ற ஒப்பந்ததாரர்கள், அந்த நிதியை அறக்கட்டளை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு பெரும் நன்கொடைகளாகவும், கட்டுமானப் பணிகளாகவும் திருப்பி விட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
அரசு நிதி திசைதிருப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட வருமானம், நிதி ஆவணங்கள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிப்பதே இந்த சோதனைகளின் நோக்கம் ஆகும்.
Hindusthan Samachar / vidya.b