Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் மருத்துவக் கழிவுகளை அறிவியல் ரீதியாகவும், பாதுகாப்பான முறையிலும் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத்துவர் ஷர்மேஷ் கான் மற்றும் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் தினமும் சுமார் 4.5 டன் மருத்துவக் கழிவுகள் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படுவதாகவும், அவற்றில் ஒரு பகுதி முறையாக அகற்றப்படாமல் திறந்தவெளி, காலி இடங்கள் மற்றும் வைகை ஆற்றங்கரை பகுதிகளில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.
மேலும், தென் மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளைச் சேகரிக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாகக் கழிவுகள் சேகரிக்கப்படாததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் மனிதர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக் கழிவுகள் குறிப்பாக வைகை ஆற்றுப் பகுதிகளில் கொட்டப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், “மனுதாரர் குறிப்பிடும் பிரச்சினை மிகவும் தீவிரமானது. வைகை ஆற்றுப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam