ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - கொல்கத்தாவில் 9 பேர் பலி
கொல்கத்தா, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படு
ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - கொல்கத்தாவில் 9 பேர் பலி


கொல்கத்தா, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த ஹோட்டலில் திடீரென தீப்பற்றியுள்ளது. ஹோட்டலின் பல தளங்களுக்கும் தீ மளமளவென பரவியதால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b