நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை அனுமதி - நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஐந்து முனைகளில் இருந்து சேலத்தை நோக்கி இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம
நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை அனுமதி - நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஐந்து முனைகளில் இருந்து சேலத்தை நோக்கி இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,

ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும், இருசக்கர வாகனப் பேரணியை அரசு முடக்குவது ஏன் என காவல்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், திராவிடர் கழகத்தின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை

(ஆகஸ்ட் 20) அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

பேரணியில் அதிகபட்சமாக 20 இருசக்கர வாகனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பேரணி செல்லும் வழித்தடங்கள், பங்கேற்கும் வாகனங்களின் எண்கள் மற்றும் கால அட்டவணையை முன்கூட்டியே காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பேரணியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து விதிகளையும் திராவிடர் கழகம் முறையாகப் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டமிடப்பட்ட பைக் பேரணியானது வரும் ஆகஸ்ட் 22, 2026 அன்று தொடங்கி ஆகஸ்ட் 25, 2026 வரை நடைபெற உள்ளதாகத் திராவிடர் கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b