Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள் கூட்டம் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.
லங்கா அருகே உள்ள ஹவாய்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யானைக் கூட்டம் தண்டவாளத்தை நெருங்குவதை அங்கு கண்காணிப்பில் இருந்த வனத்துறை ஊழியர்கள் கவனித்துள்ளனர். அதே நேரத்தில் டவுன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அந்தப் பகுதியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் லம்டிங் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததுடன், ரயிலின் லோகோ பைலட்டையும் எச்சரித்தனர்.
வனத்துறை மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கிணைந்த விரைவான நடவடிக்கையால், ரயில் பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்தப்பட்டது. யானைகள் எந்தவித அச்சமும் இடையூறும் இன்றி மெதுவாக தண்டவாளத்தைக் கடந்து அடுத்த காட்டுப் பகுதிக்குச் சென்ற பின்னர், ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் யானைகள் வழித்தடங்கள் ரயில் பாதைகளைக் கடக்கும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
வனவிலங்குகளைப் பாதுகாக்க வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பல இடங்களில் வேகக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்றைய சம்பவம் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான இணக்கமான சகவாழ்விற்கு ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b