ஸ்ரீவைகுண்டத்தில் முழு கடையடைப்பு - வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
தூத்துக்குடி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நீதிமன்றத்திற்கான புதிய கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முழு கடையடைப்பு மற்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவைகுண்
Total shop shutdown in Srivaikuntam


தூத்துக்குடி, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நீதிமன்றத்திற்கான புதிய கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முழு கடையடைப்பு மற்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நீதிமன்ற வளாகம் அமைப்பதற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அதற்கான கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கிடப்பில் கிடக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. வணிகர்கள் தாமாக முன்வந்து கடைகளை அடைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், அரசு உடனடியாக தலையிட்டு கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b