Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் அண்ணாசிலை அருகே இன்று திரண்டனர். அங்கிருந்து மாடுகளுடன் பேரணியாக வர இருந்தனர். மாடுகளுடன் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பால் உள்ள கேன்களுடன் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்றனர்.
போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் அன்புமணி, தலைவர் சீனு. பத்மநாபன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சங்க நிர்வாகிகள் கலைச்செல்வன், பலராமன் முன்னிலை வகித்தனர். தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.
பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
“பாலுக்கான கொள்முதல் விலையை ஆதார விலையாக லிட்டருக்கு ரூ. 60 விலை உயர்த்தி தரவேண்டும்.
தீவன மானியத்தை வங்கி கணக்கில் வழங்காமல் மாதம் தோறும் பாண்லே தீவன ஆலை மூலம் உற்பத்தி செய்து தீவனமாக மானிய விலையில் தரவேண்டும்.
ஊக்கத்தொகை தரவேண்டும். குலுக்கல் முறையில் தேர்வு செய்த 500 மாடுகளை உடன் தரவேண்டும். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் செப்.10 முதல் பாண்லேக்கு பால் தர மாட்டோம்” என்றனர்.
பேரணியில் சிபிஎம் நிர்வாகி ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பால் உற்பத்தியாளர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சட்டப்பேரவை அருகே வந்தனர். அவர்கள் அங்கு பாலை ஊற்றி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN