Enter your Email Address to subscribe to our newsletters

வாணியம்பாடி, 22 ஆகஸ்ட் (ஹி.ச)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் பழைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள் மற்றும் இதர பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அக்கம் பக்கத்து குடியிருப்புவாசிகளுக்குக் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும் அச்சமடைந்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் குடோனுக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததாலும், அக்கம் பக்கத்தினர் துரிதமாக வெளியேற்றப்பட்டதாலும் நல்வாய்ப்பாகப் பெரிய உயிர்ச்சேதம் ஏதும் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b