Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச)
மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து மொத்தம் 48 சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் இந்த உயரிய விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் எம் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் தென்காசி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. தங்கராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் திருமதி. அமுதா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரின் கல்விப் பணியும் மேன்மேலும் சிறக்கட்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b