Enter your Email Address to subscribe to our newsletters

கூடலூர், 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் இருவரை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
லாரஸ்டன் பகுதியில்
கடந்த 9-ம் தேதி பாலகிருஷ்ணன் என்பவரையும், நேற்று ரவிச்சந்திரன் என்பவரையும் புலி தாக்கிக் கொன்றது. குடியிருப்புகள் அருகே அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களால் ஓவேலி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் அல்லது சுட்டுப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, ரவிச்சந்திரனின் உடலை எடுக்க விடாமல் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ராக்கேஷ் குமார் டோக்ரா உத்தரவின்பேரில் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து லாரஸ்டன் பகுதியில் 7 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 38 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 80 பேர் கொண்ட வனத்துறையினர் குழு பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
புலியின் கால் தடம் மற்றும் எச்சங்களை ஆய்வு செய்து அதன் இருப்பிடத்தை கண்டறிய 2 குழுக்களும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் புலியின் நடமாட்டத்தை ஆய்வு செய்ய 2 குழுக்களும், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க 3 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 2 குழுக்களும், கூண்டுகளை கண்காணிக்க 4 குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, கிராம மக்கள் தனியாக பணிக்கோ, விறகு சேகரிக்கவோ வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஓவேலி லாரஸ்டன் பகுதியில் புலியை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P