புனேவில் இன்று 'மாணவர்கள் குரல்' - ராகுல் காந்தி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி
புனே, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் எழுச்சி இயக்கமான ''சத்ரோன் கி கூஞ்ச்'' எனப்படும் ''மாணவர்களின் குரல்'' நிகழ்ச்சியின் நான்காவது கட்டம் இன்று நடைபெறுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராக
புனேவில் இன்று 'மாணவர்கள் குரல்' - ராகுல் காந்தி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி


புனே, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் எழுச்சி இயக்கமான 'சத்ரோன் கி கூஞ்ச்' எனப்படும் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியின் நான்காவது கட்டம் இன்று நடைபெறுகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடந்த ஜூன் 17-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், அதன் பின்னர் டேராடூன், பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான்காவது நிகழ்ச்சி கல்வி நகரமான புனேவில் இன்று நடைபெறுகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கால் கூறுகையில், இன்றைய நிகழ்ச்சி முழுக்க முழுக்க மாணவிகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புனே எஸ்.எஸ்.பி.எம்.எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் மாணவிகள் பதிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ராகுல் காந்தி மாணவிகளுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக, நாட்டின் பெண்களுக்கு சமமான வேலை வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

குறிப்பாக வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள், அதிகரித்து வரும் கல்விக் கட்டணம், வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவிகளின் குரலை கேட்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த நிகழ்ச்சிக்கு புனே காவல்துறை 30 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், சட்டம் ஒழுங்கை பேணுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பதாகைகளை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b