சென்னை மண்டலம் 4-ல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – போலீசாருடன் தள்ளு முள்ளு
சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலம் 4-ல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பூர் பகுதியில் உள்ள முதல்வர்
போராட்டம்


சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலம் 4-ல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பூர் பகுதியில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் திரண்ட நிலையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டு தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

மண்டல அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அலுவலகத்திற்குள்ளேயே கட்டுப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசார் போராட்டக்காரர்களை அலுவலகத்திற்குள் வைத்து கட்டுப்படுத்த முயன்றபோது, பெண் தூய்மை பணியாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்க முயன்ற போலீசார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றினர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam