Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ரஷ்ய தலைவர்களுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ரஷ்ய துணைப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மான்டுரோவுடன் இணைந்து இந்தியா-ரஷ்யா பொருளாதார, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான 26-வது அரசுகளுக்கு இடையிலான ஆணையக் கூட்டத்திற்கு (IRIGC-TEC) ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார்.
இந்தக் கூட்டத்தில் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வர்த்தக கருத்தரங்கிலும் அவர் உரையாற்ற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திக்கும் ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி உக்ரைன் போர், பிரிக்ஸ், ஜி-20 மற்றும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் பாரம்பரிய நட்பு நாடான ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளதால், சர்வதேச அளவில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b