Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா்உத்தரவின்
பேரில், போதை பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெங்களூருவில் இருந்து சுமார் 600 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாகனத்தில் கடத்தி வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலை கீழப்பாவூர் விலக்கு அருகே பாவூர்சத்திரம் ஆய்வாளர் வேல்கனி, உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவா்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், குருவன்கோட்டை கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் பாலகிருஷ்ணன் (30) அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (23) மற்றும் லோடுவேன் ஓட்டுநர் துத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்த சேர்மக்கனி மகன் மணிகண்டன் (38) ஆகிய மூவரும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்களை கடத்தி வந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சுமை வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சுமாா் 600 கிலோ குட்கா, 25 மூட்டைகள் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b