Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத், 23 ஆகஸ்ட் (ஹி.ச)
பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
யாஷ் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அரங்கில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மேடையில் நடிகர் யஷ் ரசிகர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் நடிகர் யஷை தெளிவாகப் பார்ப்பதற்காக அங்கிருந்த பெரிய டிஜே ஸ்பீக்கர் பாக்ஸ்கள் மற்றும் விளக்குகள் வைக்கப்பட்டிருந்த உயரமான இரும்பு ஸ்டாண்ட் மீது ஏறினர்.
பாரம் தாங்காமல் அந்த ஒட்டுமொத்த கட்டுமானமும் திடீரென ரசிகர்கள் மீது சரிந்து விழுந்தது.
மேடையில் விபத்து நடப்பதைக் கண்ட நடிகர் யஷ், உடனடியாகத் தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு, அங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா? தயவுசெய்து கவனமாக இருங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று ரசிகர்களின் நலம் குறித்து பதற்றத்துடன் விசாரித்தார்.
மேலும், உயரமாக அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தூணில் ஏறியிருந்த ரசிகர்களையும் உடனடியாகக் கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த விபத்தில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் ஒரு கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மற்ற மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், ஒரு மாணவி அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த படக்குழுவினர் காயமடைந்த இளைஞர்களின் மருத்துவ செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த எதிர்பாராத விபத்தைத் தொடர்ந்து, போதிய பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதாக, அந்த தனியார் கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b