வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரை தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இருக்காது – ஈஸ்வரன்
பொள்ளாச்சி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி சட
ஈஸ்வரன்


பொள்ளாச்சி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பன் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன்,

பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதே தங்களது முதன்மையான இலக்கு என்றார். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தொகுதியை முதன்மையான தொகுதியாக மாற்ற சட்டமன்ற உறுப்பினர் நித்யானந்தம் தீவிரமாகப் பணியாற்றுவார் எனவும் கூறினார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ரேக்ளா பந்தயத்திற்கு பொள்ளாச்சியில் காவல்துறை திடீரென அனுமதி மறுத்ததற்கு ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்தார். தீரன் சின்னமலை நினைவாக தங்கள் கட்சியும் ரேக்ளா தலைமைச் சங்கமும் இணைந்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகளும் வண்டிகளும் வந்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் அவர் கூறினார்.

வேறு தேதியில் ரேக்ளா போட்டி நடத்த அனுமதி கோரி அரசிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகளை விமர்சித்த ஈஸ்வரன், மக்கள் முன்னேற்றத்திற்கான விவாதங்கள் நடைபெற வேண்டிய சட்டப்பேரவை நேரத்தை வீணடிக்கும் இடமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். சட்டப்பேரவை நேரலை பொழுதுபோக்கு நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்று மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை தாங்களும் எதிர்க்கட்சியினரும் வேண்டாம் எனத் தெரிவித்த பின்னரும், அதுகுறித்து நீண்ட நேரம் தேவையற்ற விவாதம் நடைபெற்றதாக அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாகவும் அவையின் நேரம் வீணடிக்கப்பட்டதாகக் கூறினார். சட்டப்பேரவை நடைமுறைகளில் சபாநாயகர் உடனடியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்களை அரசியல் போராட்டங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற அரசின் சுற்றறிக்கையை வரவேற்ற ஈஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தன்னிச்சையான போக்கால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என கவலை தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தை வரவேற்பதாகக் கூறிய அவர், புதிய அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு ஆளுங்கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam