Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த சின்னபுதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன்.
இவர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிவபாலனின் அண்ணனுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மகளை திருமணம் செய்து வைத்திருந்த நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முருகேசனின் இளைய மகளை தனக்கு திருமணம் செய்து தரக்கோரி சிவபாலன் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தனது மகளை திருமணம் செய்து தர முருகேசன் மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் முருகேசனின் வீட்டிற்கு சென்ற சிவபாலன், பெண் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது முருகேசனின் மகன் அருண்ராஜை தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்ட சிவபாலன் முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற முருகேசனின் கட்டைவிரல் துண்டானதுடன், அருண்ராஜுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சிவபாலனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிவபாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிவபாலனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் முருகேசன் மற்றும் அவரது மகன் அருண்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சிவபாலனின் உடல் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam