பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து சரிவு - ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை நீட்டிப்பு
தருமபுரி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பி
Decline in Cauvery water inflow at Biligundlu


தருமபுரி, 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாகவும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவும் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீரின் வேகம் அதிகமாகவே உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து இன்று 11-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி பரிசல் துறைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் தடை உத்தரவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இருப்பினும் பாதுகாப்புப் பணியில் தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Hindusthan Samachar / vidya.b