வாழை இலையில் அறுசுவை உணவுடன் குரங்குகளுக்கு ஓணம் விருந்து
திருவனந்தபுரம் , 26 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி குடும்பத்தினர், நண்பர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி மகிழ்வது வழக்கம். அதேபோல், கொல்லம் மாவட்டம் சாஸ்தாம் கோட்டாவில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி குரங்க
A


திருவனந்தபுரம் , 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி குடும்பத்தினர், நண்பர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி மகிழ்வது வழக்கம்.

அதேபோல், கொல்லம் மாவட்டம் சாஸ்தாம் கோட்டாவில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டு வருகிறது. ‘வானர சத்யா’ என்று அழைக்கப்படும் இந்த விருந்து, ஓணம் பண்டிகையின் முக்கிய நாட்களான உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய 2 நாட்களிலும் நடைபெறும்.

அதன்படி, உத்திராடம் நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள ‘வானர போஜனசாலா’ பகுதியில் குரங்குகளுக்காக ஓணம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

வாழை இலைகள் விரிக்கப்பட்டு, அதில் சோறு, பருப்பு குழம்பு, அப்பளம், பச்சடி, அவியல், ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் பரிமாறி வைக்கப்பட்டன.

விருந்து தயாரானதும் குரங்குகள் வழக்கம்போல் மண்டபத்திற்கு வரத்தொடங்கின. முதலில் வந்த ஒரு குரங்கு தனது வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை அமைதியாக சாப்பிட்டு விட்டு சென்றது.

பின்னர் வந்த மற்றொரு குரங்குக் கூட்டமும், அடுத்தடுத்து வந்த குரங்குகளும் வரிசையாக அமர்ந்து உணவை சாப்பிட்டன.

குரங்குகள் ஒன்றுக்கொன்று இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியாக அமர்ந்து விருந்தை சாப்பிட்டுச் சென்ற காட்சி அங்கு திரண்டிருந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனை பக்தர்கள் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்து ரசித்தனர்.

இதேபோல், திருவோணம் நாளான இன்றும் குரங்குகளுக்கு சிறப்பு ஓணம் விருந்து வழங்கப்பட உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA