சேலம் அருகே தனியார் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து
சேலம், 27 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்
Massive fire at a private parking lot near Salem.


சேலம், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

வாகன நிறுத்துமிடத்தின் அருகில் செயல்பட்டு வந்த பழைய இரும்பு கடை குடோனும் இந்த தீயில் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விபத்து காரணமாக சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாபேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மின் கசிவு காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பொன்னம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வாகன உரிமையாளர்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b