Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக, ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 6500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே நீர்வரத்து இதே அளவில் நீடித்து வருவதால், பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கத்திற்கு விதித்த தடை 12-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசலில் சவாரி செய்து அருவிகளைக் கண்டு ரசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசல் துறை மற்றும் அருவிக்குச் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருந்து அருவியின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.
தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், கரையோரப் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b