Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 2026-27ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 நவீன மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2,37,133 மிதிவண்டிகளும், மாணவியர்களுக்கு 2,95,255 மிதிவண்டிகளும் என மொத்தம் 5,32,388 மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. மிதிவண்டிகளுடன் மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளது.
இந்த மிதிவண்டிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ISO சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து, நிரந்தர விலை ஒப்பந்த (Fixed Rate Contract) அடிப்படையில் e-Tender மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒப்பந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள IS தரநிலைகளுக்கு இணங்க, அனைத்து உதிரிபாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை உற்பத்தி செய்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விநியோகிக்கும் திறன் கொண்ட நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 150 நாட்களுக்குள் மிதிவண்டிகளை விநியோகம் செய்ய வேண்டும். ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.70 லட்சம் பிணை வைப்புத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை https://tntenders.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதே இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.09.2026 மாலை 3 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P