தடுப்புக் காவல் ஆலோசனைக் குழு மறுசீரமைப்பு - ஓய்வுபெற்ற நீதியரசர்கள் நியமனம்
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் ஒருவரை காவலில் வைப்பது சட்டப்படி நியாயமானதா என்பதை ஆய்வு செய்யும் தடுப்புக் காவல் ஆலோசனைக் குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வ
தலைமைச் செயலகம்


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் ஒருவரை காவலில் வைப்பது சட்டப்படி நியாயமானதா என்பதை ஆய்வு செய்யும் தடுப்புக் காவல் ஆலோசனைக் குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் கலையரசன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்புக் காவல் என்பது குற்றம் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தாலும், ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்பதால், அது சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பு நடைமுறையாக ஆலோசனைக் குழு செயல்படுகிறது.

தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், அதற்கான காரணங்கள், அரசு தாக்கல் செய்யும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க போதுமான சட்டப்பூர்வ காரணங்கள் உள்ளனவா என்பதை குழு பரிசீலிக்கும்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் அடங்கிய புதிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருப்பது, குண்டாஸ் உள்ளிட்ட தடுப்புக் காவல் நடவடிக்கைகளில் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P