நாமக்கல்லில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.17,200க்கு கொள்முதல் - வரலாறு காணாத விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல், 29 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியின் மையமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 17,200க்கு கொள்முதல் செய்யப்படுக
நாமக்கல்லில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.17,200க்கு கொள்முதல் - வரலாறு காணாத விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


நாமக்கல், 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியின் மையமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூபாய் 17,200க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு வெறும் 8,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

அதன் பிறகு படிப்படியாக உயரத் தொடங்கிய விலை, தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.

விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உற்பத்தி சரிவு கூறப்படுகிறது. பருவமழை பொய்த்தது, நோய் தாக்குதல் மற்றும் சாகுபடி பரப்பு குறைந்தது போன்ற காரணங்களால் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜவ்வரிசி, ஸ்டார்ச் மற்றும் சேமியா உற்பத்திக்கான தேவை அதிகரித்திருப்பதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மரவள்ளிக்கிழங்கு 1,300 ரூபாய்க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் ஆலைகளில் கிழங்குக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி பிரதானமாக நடைபெற்று வருகிறது.

இந்த மாவட்டங்களில் இருந்து தான் மாநிலம் முழுவதும் உள்ள ஆலைகளுக்கு கிழங்கு அனுப்பப்படுகிறது.

விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஆலை உரிமையாளர்கள் மற்றும் இறுதி நுகர்வோர் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b