Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி அரசு பொறுப்பேற்ற பிறகு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளூர் தொகுதி எம்.எல்.ஏ. விரூபாக்ஷியை நள்ளிரவில் கைது செய்த விதம் கண்டிக்கத்தக்கது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. தீவிரவாதியா? அவரை கைது செய்வதற்காக இரவு 2.45 மணிக்கு நூற்றுக்கணக்கான போலீசார் வீட்டை முற்றுகையிட்டு கதவுகளை உடைத்து அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று ஜெகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிப்பகிரி மண்டலம் நேமகல்லு கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட ஒருவர் அளித்த தகவலின் பேரில் அவருக்கு உதவுவதற்காக விரூபாக்ஷி சென்றதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அவரது சகோதரர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. மீதே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருப்பது அநீதியானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், போலீசார் விரூபாக்ஷி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியதன் மூலம் ஆதாரங்களை மறைக்க முயற்சி செய்வதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாலை விபத்து ஒன்றை கொலை வழக்காக மாற்றி முன்னாள் அமைச்சர் சீதிரி அப்பலராஜு கைது செய்யப்பட்டதாகவும், முன்னாள் எம்.எல்.ஏ. ஷேக் முகமது முஸ்தபா மற்றும் அவரது மகன் மீது வணிக பிரச்சினையை காரணம் காட்டி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெகன் குற்றம்சாட்டினார்.
அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சி.-2025 முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும், மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி உதவித்தொகை நிலுவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரமும், போலீஸ் பலமும் நிரந்தரமானது அல்ல. எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், எத்தனை நள்ளிரவு கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பின்வாங்காது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று ஜெகன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA