ஷ்ராவண் திருவிழாவை முன்னிட்டு இன்று கான்பூரில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
கான்பூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச) உத்திரப் பிரதேச மாநிலத்தில் புனித ஷ்ராவண் மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கன்வர் யாத்திரையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்கள் ஆறுகளில் இருந்து புனித நீரை சேகரித்து நீண
ஷ்ராவண் திருவிழாவை முன்னிட்டு இன்று கான்பூரில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்


கான்பூர், 03 ஆகஸ்ட் (ஹி.ச)

உத்திரப் பிரதேச மாநிலத்தில் புனித ஷ்ராவண் மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கன்வர் யாத்திரையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

பக்தர்கள் ஆறுகளில் இருந்து புனித நீரை சேகரித்து நீண்ட தூரம் சுமந்து சென்று சிவன் கோயில்களில் வழங்குவது இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாகும்.

சாவன் என்றும் அழைக்கப்படும் ஷ்ராவண் மாதம், இந்து புராணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான மாதமாகும். இந்த மாதத்தில் சிவனை வழிபடுவது அனைத்து துன்பங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் புனித ஷ்ராவண் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று கான்பூர் மாவட்டம் முழுவதும் கன்வர் யாத்திரையை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்துவதற்காக கான்பூர் காவல்துறை விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது.

சட்டம் ஒழுங்கு இணை காவல் ஆணையர் விபின் தண்டா, மாவட்ட அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகக் குழுக்களுடன் இணைந்து முக்கிய கோயில்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

இன்று ஷ்ராவண் மாதத்தின் முதல் திங்கட்கிழமை. இதை முன்னிட்டு அனைத்து அதிகாரிகளுடன் இணைந்து கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். கோயில் நிர்வாகக் குழுவையும் இதில் ஈடுபடுத்தி, அவர்களது ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

நீங்கள் பார்ப்பது போல், அனைத்து பணிகளும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கூடுதலாக, பல்வேறு இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதற்காக உள்ளூர் உளவுப் பிரிவு (LIU) மற்றும் ஆன்டி-ரோமியோ படைகள், மாகாண ஆயுதக் காவல் படை (PAC) மற்றும் ரிசர்வ் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

யாத்திரைக்காக வகுக்கப்பட்ட போக்குவரத்துத் திட்டத்தின்படி போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளோம். கனரக வாகனங்கள் லக்னோவை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பித்தூர் மற்றும் காட்டம்பூர் வழியாக திருப்பி விடப்படுகின்றன.

மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் பெரிய கோயில்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான ஏற்பாடுகள் சுமுகமாக செயல்பட்டு வருகின்றன, அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b