Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சமஸ்திபூரில் இருந்து சஹர்சாவுக்கு சென்று கொண்டிருந்த 63344-ம் எண் பயணிகள் ரயில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சிம்ரி பக்தியார்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, திடீரென என்ஜினில் இருந்து புகை வரத் தொடங்கியுள்ளது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி என்ஜினை முழுவதுமாக சூழ்ந்ததோடு, என்ஜினை ஒட்டியிருந்த ஒரு பெட்டியிலும் பரவியுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்க முயன்றனர்.
உடனடியாக ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
தகவலறிந்ததும் சஹர்சா தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இது குறித்து உதவி தீயணைப்பு அதிகாரி நிரஞ்சன் குமார் கூறுகையில்,
ரயில் என்ஜினில் தீப்பிடித்து எரிவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் நாங்கள் சஹர்சா தீயணைப்பு நிலையத்தில் இருந்து நுரை பீய்ச்சும் வாகனம் மற்றும் தண்ணீர் வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம்.
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b