Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானாவில் இளைஞர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என்று பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். குற்றம்சாட்டியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.டி.ஆர்., காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது வெளியிட்ட ‘யூத் டிக்ளரேஷன்’ வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
சட்டசபையில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு கால அட்டவணை வெளியிடப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
தெலங்கானாவில் சுமார் 20 ஆயிரம் காவல்துறை பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அரசு குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கே.டி.ஆர். தெரிவித்தார்.
தேர்தலின்போது 2 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்த காங்கிரஸ் அரசு, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்பு கேட்டு போராடும் இளைஞர்களிடம் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசிய விதம் பொறுப்பற்றது என்று குற்றம்சாட்டிய கே.டி.ஆர்., பொறியியல் பட்டதாரிகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளுக்கும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி அரசியலமைப்பு குறித்து பேசும் நிலையில், தெலங்கானா இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினையில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் கல்வித் தகுதி குறித்தும் விமர்சனம் செய்த கே.டி.ஆர்., “யாருடைய உதவியும் இல்லாமல் தேர்தல் பிரமாணப் பத்திரத்தை நிரப்ப முடியுமா? ஒரு வேலை நேர்காணலுக்காவது அவர் சென்றிருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
பிஆர்எஸ் ஆட்சியில் கொரோனா கால சவால்கள் இருந்தபோதிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறிய கே.டி.ஆர்., காங்கிரஸ் அரசு அறிவித்த 2 லட்சம் வேலைகளை எப்போது வழங்கும் என்பதை ரேவந்த் ரெட்டியும், ராகுல் காந்தியும் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA