லஷ்கர் போனாலு விழா - மகாங்காளி அம்மனுக்கு பட்டுப் புடவை, போனம் சமர்ப்பித்த முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி
சிகந்தராபாத் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானாவின் புகழ்பெற்ற லஷ்கர் போனாலு திருவிழா சிகந்தராபாத்தில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாங்காளி அம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி விழாவில்
A


சிகந்தராபாத் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானாவின் புகழ்பெற்ற லஷ்கர் போனாலு திருவிழா சிகந்தராபாத்தில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாங்காளி அம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தெலங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி விழாவில் கலந்து கொண்டு மகாங்காளி அம்மனை தரிசித்தார்.

மாநில அரசின் சார்பில் அம்மனுக்கு பட்டுப் புடவையையும், பாரம்பரிய வழிபாட்டு காணிக்கையான போனத்தையும் சமர்ப்பித்த அவர், சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

பின்னர், தெலங்கானா மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழவும், மாநிலத்தில் விவசாயம் செழிக்கவும் அம்மனிடம் பிரார்த்தனை செய்தார்.

கோவிலுக்கு வந்த முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து கருவறைக்குள் சென்று அம்மனை தரிசித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் கொண்டா சுரேகா, பொன்னம் பிரபாகர், சீதக்கா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. தானம் நாகேந்தர், பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்று தீர்த்தப் பிரசாதம் பெற்றனர்.

மேலும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாங்காளி அம்மனை தரிசித்து போனம் சமர்ப்பித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA