Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 30 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலும், இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கான நீர்வரத்து தொடர்ந்து உயர்வைக் கண்டு வருகிறது.
இந்த நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிகுண்டுலுவில் நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்றில் நீரோட்டம் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து இன்று15-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b