சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ் - 10 பேர் பிடிபட்டனர், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 10 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து R15, KTM, Apache உள்ளிட்ட 5 இருசக்கர வ
Bike


சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 10 பேரை போலீசார் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து R15, KTM, Apache உள்ளிட்ட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் 100 அடி சாலையில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

குமார் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், குமாரின் இருசக்கர வாகனத்தில் உரசியதாகக் கூறப்படுகிறது.

இதில் அதிர்ஷ்டவசமாக குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேடு போக்குவரத்து ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி 5 இருசக்கர வாகனங்களில் 10 பேர் அதிவேகமாகவும் அதிக சத்தத்துடனும் வந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து அந்த 5 இருசக்கர வாகனங்களையும் வழிமறித்து, அதில் இருந்த 10 பேரையும் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து R15, KTM, Apache உள்ளிட்ட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் ஒன்று பதிவு எண் பலகை இல்லாமல் இயக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிடிபட்ட 10 பேரும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 இருசக்கர வாகனங்களும் மேல் விசாரணைக்காக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

நள்ளிரவு நேரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ