Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி திருக்கோயிலில் குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருப்பணிக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், கோ பூஜை, வேத பாராயணம், புனித நீர் கடங்கள் ஊர்வலம் என சமய சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டன.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித கலச நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கணபதி பப்பா மோரியா என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் ராஜ கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்களுடன் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேக வைபவத்தில் பங்கேற்ற அமைச்சர் தமிழன் பார்த்திபன், ராஜகணபதிக்கு நடைபெற்ற சிறப்பு மகா தீபாராதனையில் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தார். பின்னர் அவர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற, சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Hindusthan Samachar / vidya.b