Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை அதிகரிப்பதற்கான விரிவாக்கத் திட்டங்கள் குறித்து தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை விமான நிலையத்தை தாம்பரம்–மதுரவாயல் புறவழிச்சாலையுடன் இணைக்கும் புதிய அணுகுச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அடையாறு ஆற்றின் இயற்கையான ஓட்டத்திற்கும், சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அணுகுச்சாலையை மேம்பாலமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விமான நிலைய முனையத்தை தாம்பரம்–மதுரவாயல் புறவழிச்சாலையுடன் இணைக்க இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) முன்மொழிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) மேற்கொண்ட பரிந்துரையில், சுமார் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பால அணுகுச்சாலை அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழிச்சலூர் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தாரப்பாக்கம் பகுதிகள் வழியாக இந்தச் சாலையை அமைக்க CUMTA பரிந்துரை செய்துள்ளது.
அடையாறு ஆற்றின் இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அணுகுச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஆய்வுக்காக விரைவில் டெண்டர் கோர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு குறுக்கு ஓடுபாதைகளுக்கு இடையே கூடுதல் நிலம் கையகப்படுத்தாமல் முன்மொழியப்பட்டுள்ள ஐந்தாவது முனையம் மற்றும் அதன் செயலாக்கம் குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.
புதிய துணை முனையம் மற்றும் அணுகுச்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் பட்சத்தில், சென்னை விமான நிலையத்தின் ஆண்டுதோறும் பயணிகளைக் கையாளும் திறன் தற்போதைய 35 மில்லியனிலிருந்து 55 மில்லியனாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், விரைவு வெளியேறும் டாக்சிவே வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் ஓடுபாதையின் செயல்திறனையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 35 விமானங்களை கையாளும் திறன், 45 விமானங்கள் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட சூழலில், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எதிர்கால தேவையை சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ