Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், பட்டாசு தீப்பொறி பட்டு அலங்கார ஹீலியம் பலூன் வெடித்து சிதறியதில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முன்னதாக மாலை 5.45 மணியளவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை புனிதம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கொடி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர், பேராலய வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், கொடியேற்ற நிகழ்ச்சியின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து பறந்த தீப்பொறி, அப்பகுதியில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ஹீலியம் பலூனில் பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஹீலியம் பலூன் திடீரென வெடித்து சிதறியதுடன், தீப்பற்றி எரிந்தபடி பக்தர்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், ஹீலியம் பலூன் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / P YUVARAJ