பிரணாப் முகர்ஜியின் 6-வது நினைவு தினத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழஞ்சலி
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012 ஜூலை 25 முதல் 2017 வரை இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டிருந்த அவர், நிதி, பாத
Defence Minister Rajnath Singh pays tribute on Pranab Mukherjee


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012 ஜூலை 25 முதல் 2017 வரை இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டிருந்த அவர், நிதி, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

1969 முதல் ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2004 முதல் இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக 23 ஆண்டுகள் இருந்துள்ளார்.

2004 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் அறியும் உரிமை, வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ஆதார் அமைப்பு மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 95-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார்.

1975-ல் பிராந்திய கிராம வங்கிகள், 1980-களின் தொடக்கத்தில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றை நிறுவுவதில் அவர் முக்கிய பங்காற்றினார். 1991-ல் மத்திய - மாநில வளப் பகிர்வுக்கான காட்கில் - முகர்ஜி சூத்திரத்தை வகுப்பதில் அவர் உதவினார்.

மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள மிராட்டி கிராமத்தில் 1935 டிசம்பர் 11 அன்று பிறந்த பிரணாப் முகர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சட்டம் பயின்றார். ஆரம்பத்தில் கல்லூரி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அவர், 1969-ல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2008-ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் 31 அன்று தனது 84-வது வயதில் அவர் காலமானார்.

அந்த வகையில் பிரணாப் முகர்ஜியின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பிரணாப் முகர்ஜி ஜியின் நினைவு நாளில் எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். எழுத்தாளுமை மிக்கவராகவும், விதிவிலக்கான அறிவாற்றல் கொண்ட ராஜதந்திரியாகவும் திகழ்ந்த பிரணாப் தா, தனது ஞானம், அரசியல் நுட்பம் மற்றும் நாடாளுமன்ற மரபுகள் குறித்த ஆழமான புரிதலால் இந்திய பொது வாழ்வை வளப்படுத்தினார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் பல்வேறு குரல்களை ஒன்றிணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்கும் அவரது திறன் அவரது சிறப்பான பொது வாழ்வின் அடையாளமாகும். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையும், இந்திய ஜனநாயக மரபுகளுக்கு அவர் ஆற்றிய நிலையான பங்களிப்பும் என்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்

என்று ராஜ்நாத் சிங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b