தி.மு.க வில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) திமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி முடிவு திமுக மற்றும் ஈரோடு மாவட்ட அரசியல் வட
Thoppu


ஈரோடு, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

திமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி முடிவு திமுக மற்றும் ஈரோடு மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், தேர்தல் தோல்விக்குப் பின்னரும் கட்சிக்குள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாகவும், திமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தன்னுடன் இருந்துகொண்டே தனக்கு எதிராக செயல்பட்டதாகவும் வேதனை தெரிவித்து வந்தார்.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் முத்துசாமியுடன் தோப்பு வெங்கடாசலத்துக்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. தனது தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் அவர் ஏற்கனவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

தேர்தல் காலத்திலும், தேர்தலுக்குப் பின்னரும் கட்சிக்குள் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற மனக்குறையில் தோப்பு வெங்கடாசலம் இருந்து வந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, “விரைவில் மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பேன்” என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பை நடத்தாமல் அறிக்கை வாயிலாகவே திமுகவில் இருந்து விலகும் தனது முடிவை அறிவித்துள்ளார்.

திமுகவில் ஏற்பட்ட தொடர் மனக்கசப்பு, கட்சிக்குள் ஏற்பட்டதாக கூறப்படும் ஓரங்கட்டல் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமியுடனான மோதல் போக்கு ஆகியவை அவரது விலகலுக்கான முக்கிய பின்னணியாக பார்க்கப்படுகிறது.

திமுகவில் இருந்து விலகியுள்ள தோப்பு வெங்கடாசலம், அடுத்ததாக எந்தக் கட்சியில் இணையப் போகிறார்? அல்லது தனது அரசியல் பயணத்தை தனித்துப் தொடரப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P