சமூகநீதிப் பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும்: விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியாவில் சனாதனத்துக்கும் சமூகநீதிக்கும் இடையிலான போராட்டமே தற்போது முதன்மையான போராட்டமாக மாறியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
ரவிக்குமார்


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியாவில் சனாதனத்துக்கும் சமூகநீதிக்கும் இடையிலான போராட்டமே தற்போது முதன்மையான போராட்டமாக மாறியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சனாதனத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதாரம், அரசியல், கருத்தியல் என மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார தளத்தில் தாராளமயம், தனியார்மயத்தை எதிர்த்து நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து தனியார்மயத்தை ஒழித்து சமூகநீதிக்கு ஏற்ற சமத்துவப் பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தளத்தில் சனாதன சக்திகளுக்கு இணையான அளவில் ஜனநாயக அமைப்புகளில் இடம்பெறுவது, சனாதன சக்திகளைத் தோற்கடித்து சமூகநீதிக் கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்துவது, இறுதியாக அனைத்து ஆட்சியதிகார அமைப்புகளிலும் சனாதனத்தை முற்றாக அகற்றி சமூகநீதி அரசியலின் மேலாதிக்கத்தை நிறுவுவது என மூன்று கட்ட நடவடிக்கைகள் தேவை என ரவிக்குமார் கூறியுள்ளார்.

கருத்தியல் பிரச்சாரமே இந்தப் பணிகளுக்கு அடிப்படையானது என குறிப்பிட்டுள்ள அவர், சமூகநீதிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களை கருத்தியல் ரீதியாகத் தயார்படுத்துவதற்காக சமூகநீதிப் பிரச்சாரப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான முறையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சனாதனவாதிகளின் ஊடகங்களை சமூகநீதிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்களே தொடர்ந்து பார்ப்பதும், அவர்களது நாளிதழ்களை வாங்கிப் படிப்பதும் அவர்களை அறியாமலேயே சனாதனக் கருத்தியல் பிரச்சாரத்துக்கு ஆட்படுத்துவதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றாக சமூகநீதிக் கருத்தியல் உள்ளடக்கம் கொண்ட வலுவான மாற்று ஊடகங்களை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நூற்றாண்டில் திராவிட மற்றும் ஆதிதிராவிட அரசியல் முன்னோடிகள் பத்திரிகைகள், நூல்கள், மேடைப்பேச்சுகள் மட்டுமின்றி திரைப்படம் உள்ளிட்ட காட்சி ஊடகங்களையும் சமூகநீதிக் கருத்துகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கலைஞர் கருணாநிதி அச்சு ஊடகத்துடன் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் நடிப்பு, வசனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பங்களித்து சமூகநீதிக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

30, 40 ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கருத்தியல் பிரச்சாரத்தின் விளைவாகவே திராவிட இயக்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்தது என்றும், ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த கருத்தியல் அடித்தளமே அதன் அரசியல் நிலைத்தன்மைக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதுடன் கருத்தியல் பிரச்சாரத்தின் தேவை முடிந்துவிடாது என்றும், சமூகநீதிக் கொள்கைகளை வலுப்படுத்த தொடர்ந்து வலுவான ஊடகங்களையும் கருத்தியல் பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P