2 ஆண்டு ஆட்சியில் ஆந்திராவின் வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டார் சந்திரபாபு நாயுடு
அமராவதி , 04 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் பொருளாதார நிலை மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த வளர்ச்சி அறிக்க
A


அமராவதி , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் பொருளாதார நிலை மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டார்.

இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த 2019 முதல் 2024 வரையிலான முந்தைய ஆட்சியில் மாநிலத்தின் நிர்வாக அமைப்புகள் சீர்குலைந்ததாகவும், ஆந்திராவின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

முந்தைய அரசின் நடவடிக்கைகளால் மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அச்சத்துடன் செயல்படும் சூழல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே மக்கள் அமைதியான புரட்சியின் மூலம் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியதாகவும் கூறினார்.

எங்கள் கூட்டணிக்கு 57 சதவீத வாக்குகளும், 94 சதவீத வெற்றி விகிதமும் கிடைத்தது. மக்கள் அளித்த இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

ஆட்சி அமைந்த பிறகு 7 முக்கிய துறைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு, மாநிலத்தின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கியுள்ளோம்.

தற்போது 2 ஆண்டு ஆட்சியின் முன்னேற்ற அறிக்கையை வெளியிடுகிறோம் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பெயரும், தொழில் வளர்ச்சிக்கான மதிப்பும் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

மாநிலத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டதாகவும், பல நிறுவனங்கள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது, தலைநகரம் இல்லாமல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிர்வாகத்தை நடத்த வேண்டிய சூழல் இருந்ததாக சந்திரபாபு நாயுடு நினைவுகூர்ந்தார்.

அந்த பாதிப்புகளில் இருந்து மாநிலத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வட ஆந்திரப் பகுதியில் நீர்ப்பாசன திட்டங்கள், எஃகு தொழில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA