Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் கோவில் வளாகத்தில் தீக்குண்டம் அமைக்கப்பட்டு, மஞ்சள் உடை அணிந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ கரகங்களுடன் ஊர்வலமாக வந்து, பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, மங்கள இசை முழங்க ஸ்ரீ பச்சையம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
இந்த திருவிழாவில் வெடால் கிராமம் மட்டுமின்றி, நெற்குணம், தேசூர், மஞ்சம்பட்டு, ஆச்சமங்கலம், தெள்ளார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Hindusthan Samachar / GOKILA arumugam