ஆதி திராவிடர் நலத்துறை வழக்கறிஞர் நியமனம் - பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, சம்பந்தப
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் தாக்கல் செய்த மனுவில்,

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தாம், சமூக நலன் தொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும், இந்நிலையில் TAHDCO சார்பில் வழக்கறிஞராக மாதவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிடர் நலத்துறை, பட்டியல் சமூக மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படும் அரசு நிறுவனம் என்பதால், இதற்கு முன்பு அந்தத் துறையின் வழக்குகளில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களே நியமிக்கப்பட்டு வந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், எந்தவொரு பொது அறிவிப்பும் வெளியிடாமல், விண்ணப்பங்கள் கோராமல், தகுதி அளவுகோல்களை நிர்ணயிக்காமல், வெளிப்படையான தேர்வு முறையை பின்பற்றாமல் பட்டியல் சமூகத்தைச் சாராத ஒருவரை வழக்கறிஞராக நியமித்திருப்பது விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி, அந்த நியமனத்தை ரத்து செய்யவும், இனிவரும் காலங்களில் வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றி வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிடவும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, இந்த வழக்கறிஞர் நியமனம் அரசு வழக்கறிஞர் நியமனமா அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட நியமனமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மனுவில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், TAHDCO நிர்வாக இயக்குநர் மற்றும் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam