Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு சிறைத் தண்டனை விதிப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடித்தால், புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் (COTPA) கீழ் ரூ.200 வரை அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட பொது இடங்களில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்றும், இதனால் புகைபிடிக்காத பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த சூழலில், அபராதத் தொகையால் மட்டும் பொது இடங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த முடியாது என்பதால், தண்டனையை கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கருதப்படுகிறது.
அதன்படி, தொடர்ந்து விதிமீறுபவர்களுக்கு அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்துவதுடன், சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b