ஒகேனக்கல்லில் 2-வது நாளாக பரிசல் சவாரிக்கு தடை - காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து
தர்மபுரி, 05 ஆகஸ்ட் (ஹி.ச) தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டாவது நாளாக இன்றும் பரிசல் இயக்குவதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர
ஒகேனக்கல்லில் 2-வது நாளாக பரிசல் சவாரிக்கு தடை - காவிரியில் 18,000 கன அடி நீர்வரத்து


தர்மபுரி, 05 ஆகஸ்ட் (ஹி.ச)

தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டாவது நாளாக இன்றும் பரிசல் இயக்குவதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முதல் நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது.

நேற்று வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லின் பிரதான அருவிகளான ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், பரிசலில் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தடையால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

நீர்வரத்து சீரான பிறகே பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b