தமிழக பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை - தொல்.திருமாவளவன்
அரியலூர், 05 ஆகஸ்ட் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் அங்கனூரில், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவனின் சகோதரி பானுமதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் மலர்வளையம்
திருமாவளவன்


அரியலூர், 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் அங்கனூரில், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவனின் சகோதரி பானுமதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது பேசிய திருமாவளவன்,

தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை என்றார். பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை வைக்க வசதியுள்ள சைக்கிள்கள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்க முயற்சி எனக் குறிப்பிட்டார்.

மேலும், 'கலைஞர் கனவு திட்டம்' தற்போது 'வெற்றி வீடு திட்டம்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு, வீடு கட்டும் நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

சமூக நீதி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மற்றும் பண்டித அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டங்களுக்கு நிதி அதிகரிக்கப்பட்டிருப்பதையும் அவர் பாராட்டினார்.

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், சமூக நீதி துறை சுதந்திரமாகவும் முழுமையாகவும் செயல்பட தேவையான நிதி ஆதரவை அரசு வழங்கியிருப்பது பட்ஜெட்டில் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய அறிவிப்புகளுக்காக தமிழக முதலமைச்சருக்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்வதாக திருமாவளவன் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam