Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 08 ஆகஸ்ட் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமீறலில் ஈடுபட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெள்ளமடம், குலசேகரன்புதூர், அழகனாபுரம், இறச்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 51 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது 6 கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை, கூல் லிப் மற்றும் மெல்லும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குலசேகரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஏற்கனவே புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து மட்டும் 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், விதிமீறலில் ஈடுபட்ட மற்ற 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அழகனாபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில், அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கணேஷ் புகையிலைப் பாக்கெட்டுகளை கடையின் அருகே பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்ததும் சோதனையில் தெரியவந்தது. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P