Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி காவல்துறைக்கு மிக உயரிய அங்கீகாரமான குடியரசுத் தலைவரின் வண்ண விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வழங்கி கௌரவிக்கிறார்.
புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்பான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால சாதனைகளுக்காக காவல் படைப்பிரிவுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாக கருதப்படும் இந்த வண்ண விருதை புதுச்சேரி காவல்துறை பெறுவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில், புதுச்சேரி காவல்துறைக்கு புதிதாக ஒப்பளிக்கப்பட்டுள்ள இரண்டாவது பட்டாலியன் படைப்பிரிவையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறை நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும், மத்திய அரசின் 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி' என்ற ஹர் கர் திரங்கா விழிப்புணர்வு இயக்கத்தையும் அமைச்சர் அமித் ஷா இன்று புதுச்சேரியில் தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே, உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சியின் கண்ணியத்தை கருத்தில் கொண்டும் புதுச்சேரி முழுவதும் இன்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b