Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அம்ருத் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.
திருவேடகம் கிராமத்திற்கு அருகே செல்லும் இந்த ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக குடிநீர் வீணாவதுடன், அழுத்தம் குறைந்து பல பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் பொருட்டு அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்த பராமரிப்பு பணி காரணமாக இன்று
(செப்டம்பர் 1) மற்றும் நாளை (செப்டம்பர் 2 ) ஆகிய இரண்டு நாட்களுக்கு மாநகரின் பல்வேறு வார்டுகளில் குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் பெறும் பகுதிகளில் இந்த தடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டு விரைவில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b